Last Updated : 28 Jun, 2024 03:47 PM

13  

Published : 28 Jun 2024 03:47 PM
Last Updated : 28 Jun 2024 03:47 PM

“நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை” - நயினார் நாகேந்திரன் கருத்து

நயினார் நாகேந்திரன்

சென்னை: நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இன்று பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் இன்று நீட் தேர்வு வேண்டாம் என்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்க ஒரு கோடி, முதுகலை படிப்புக்கு ஐந்து கோடி வரை செலவாகும். நரேந்திர மோடி அரசாங்கம் சுலபமாக ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வை வைத்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் மீண்டும் பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள். உண்மை மெதுவாக சேரும் பொய் வேகமாக சேரும் என்பது போல் திரும்பத் திரும்ப பொய்யைச் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். பணம் இல்லாமல் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நீட் தேர்வில் இந்த ஆண்டு சில முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தும் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்லி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

தமிழகத்தில் மணல் கொள்ளை பெருமளவில் நடக்கிறது. இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தமிழகத்தில் 4,700 கோடி ரூபாய் அளவுக்கு கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விவாதம் வைக்க வேண்டும் என்று நேற்று மாலை கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். இன்று அது பற்றி பேச சட்டப்பேரவை தலைவர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

சுற்றுப்புற சூழல், தண்ணீர் பிரச்சினை, விவசாய பிரச்சினை என எல்லாவற்றுக்கும் மணல் ஒரு பிரச்சினையாக உள்ளது. மணல் இருந்தால் தான் நிலத்தடி நீர் இருக்கும். ஆனால், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. அரசுக்கு முறையாக வருமானம் வராமல் இடையில் இருப்பவர்கள் கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதைப் பற்றி விவாதிக்க தமிழக அரசு ஏன் மறுக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x