Last Updated : 28 Jun, 2024 03:05 PM

1  

Published : 28 Jun 2024 03:05 PM
Last Updated : 28 Jun 2024 03:05 PM

மாநகராட்சிகளாக தரம் உயரும் தி.மலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஆகியவற்றுக்குப் பின், அரசினர் சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதவை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகள் தடையாக இருப்பது தெரியவந்தது. எனவே, அந்த வரையறைகளை தளர்த்தி, மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை கணக்கிடாமல், 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகையாக இருந்த 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம் இல்லாத நடவடிக்கைகளில் வேலைவாய்ப்பு சதவீதம், பொருளாதாரம், வரலாற்று அல்லது சுற்றுலா சார்ந்த முக்கியத்துவம் ஆகியவற்றை பொருத்தமென கருதும் எந்தவொரு காரணத்தையும் கருத்தில் கொண்டு, எந்தவொரு உள்ளாட்சி பகுதியையும் தேவைக்கேற்ப பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து அறிவிக்கலாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயரும். பொதுமக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x