Last Updated : 28 Jun, 2024 03:40 PM

1  

Published : 28 Jun 2024 03:40 PM
Last Updated : 28 Jun 2024 03:40 PM

கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ‘பீக் ஹவர்ஸில் ஃபாஸ்ட் ரயில்கள் தேவை’ - பயணிகள் கோரிக்கை

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டடோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதுதவிர, இந்த குறிப்பிட்ட நேரங்களில் போதிய அளவில் மின்சார விரைவு (ஃபாஸ்ட்) ரயில்கள் இல்லாததால், பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, கூடுதல் மின்சார விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவை பல மடங்கு அதிகரித்துவிட்டன. இருப்பினும், போதிய அளவில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதை பயன்பாட்டுக்கு வந்தும், பெரிய அளவில் மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதுதவிர, காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை தடத்தில் விரைவு மின்சார ரயில்கள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. அதாவது, காலை, மாலையில் தலா 4 மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த விரைவு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, “சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நெரிசலுடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலைபோல, 16 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலை இயக்க வேண்டும்.

மேலும், இந்த ரயில், நடைமேடையில் நின்று செல்ல வசதியாக, போதிய அளவில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்தடத்தில் அலுவலக நேரங்களில் சொற்ப அளவிலேயே ஃபாஸ்ட் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன்மூலமாக, பயணிகள் நெரிசல் குறையும்” என்றார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதை அமைக்கப்பட்ட பிறகு, படிப்படியாக, ரயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதுதவிர, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்தபிறகு, இந்த பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் வசதிக்காகவும் கூடுதல் ரயில் சேவை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, தினசரி அலுவலக நேரத்தில் கூடுதல் ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஃபாஸ்ட் மின்சார ரயில்களை அதிகரிப்பது தொடர்பாக, அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x