Published : 28 Jun 2024 02:18 PM
Last Updated : 28 Jun 2024 02:18 PM

குறுவை சாகுபடி பாதிப்பு | வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம்: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும்,” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்படாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்டா குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிடாததால் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் கருகின. குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பெற முடியவில்லை. உயர்த்தப்பட்ட (NDRF) பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,000 என்று மத்திய அரசு உயர்த்தி அறிவித்ததைக்கூட வழங்காமல், இந்த திமுக அரசு ரூ. 13,500 மட்டும் வழங்கி டெல்டா விவசாயிகளை வஞ்சித்தது.

இந்த ஆண்டு ஜூன் 12-ல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாத நிலையில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதைக் கண்டுகொள்ளாமல் அவசர கோலத்தில் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் உள்ள குறைகளையும், பயிர்க் காப்பீடு அறிவிக்கப்படாததையும் குறிப்பிட்டு, உடனடியாக இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு மேற்கொள்ளப்பட வேண்டியவைகளை பட்டியலிட்டு கடந்த 15.6.2024 அன்று விரிவான அறிக்கையை வெளியிட்டேன்.

அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், அதிமுக ஆட்சிக் காலத்தில், பாதிக்கப்பட்ட பாசன பரப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூக்குரலிட்டதை டெல்டா விவசாயிகள் மறக்கவில்லை. எனவே,

  • இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்;
  • குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும் என்றும்;
  • குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால், வேளாண் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்துக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்;
  • இந்த வறட்சியால் கால்நடைகளுக்கு வைக்கோல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வினால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை எற்பட்டுள்ளது. எங்களது ஆட்சிக் காலத்தில் வறட்சி ஏற்பட்டபோது விலையில்லா வைக்கோல் தீவனம் வழங்கினோம். எனவே, விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x