Published : 28 Jun 2024 12:37 PM
Last Updated : 28 Jun 2024 12:37 PM
சென்னை: திருநெல்வேலியில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்புக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவருக்கும் அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி அலுவலகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கண்ணாடி மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் உதய தாட்சாயினி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புக் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “எனது கணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். எங்கள் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே திருநெல்வேலி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்னை அடைத்து வைத்து துன்புறுத்தினார். அங்கிருந்து தப்பித்து திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாதுகாப்புக்காக அடைக்கலம் புகுந்தேன். அதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை எனது உறவினர்கள் உடைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
எனவே, நானும் எனது கணவரும் அமைதியாக வாழ்வதற்கும் எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருப்பதற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரிடம் கடந்த 25-ம் தேதி மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT