Published : 09 May 2018 09:36 AM
Last Updated : 09 May 2018 09:36 AM

கூவம் ஆற்றின் கரையோரம் குடியிருப்புகளை தொடர்ந்து தொழில் நிறுவனங்களையும் அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: உயிர் பெறும் ‘ஆப்பூர் ஆட்டோ நகர்’ திட்டம்

புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இயங்கிவரும் தொழில் நிறுவனங்களையும் அகற்றும் பணியை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை விரைவில் தொடங்க உள்ளது.

சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. புதுப்பேட்டை பகுதியில் வணிக நிறுவனங்களும் இருப்பதால், அவற்றையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஆப்பூர்ஆட்டோ நகர் திட்டத்துக்கு அரசு உயிர் கொடுத்துள்ளது.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2009-ல் தொடங்கியது. கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இத்திட்டத்துக்காக கூவம் ஆற்றில் அமைக்கப்படும் தூண்களால் நீரோட்டம் பாதிக்கும் என்று கூறி திட்டத்துக்கு தடை விதித்தது. அதனால் ஆட்டோ நகர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியது.

ஏற்கெனவே சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை, கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றி வரும் நிலையில், தொழில் நிறுவனங்களையும் அகற்ற வேண்டியுள்ளது. அதனால் ஆப்பூர் ஆட்டோ நகர் திட்டத்துக்கு நிதி கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறும்போது, “ஆப்பூர் ஆட்டோ நகர் திட்டம் ரூ.19.63 கோடி செல வில் செயல்படுத்தப்பட உள்ளது. புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிபேட்டையில் மொத்தமுள்ள 1,657 நிறுவனங்களில் 458 நிறுவனங்கள், கூவம் ஆற்றில், பறக்கும் சாலை திட்டப் பகுதியில் அமைந்துள்ளன. அவை, சென்னை ஆறு கள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டப் பகுதியிலும் வருகின்றன. அதனால் இந்த அறக்கட்டளை, ஆப்பூர் ஆட்டோ நகர் திட்டத்துக்கு ரூ.9 கோடியே 90 லட்சம் நிதி அளித்துள்ளது.

தற்போது புதுப்பேட்டை பகுதியில் வீடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், தொழில் நிறுவனங்களையும் அகற்றி, ஆப் பூர் ஆட்டோ நகரில் இடமாற்றம் செய்ய இருக்கிறோம். அதற்காக 383 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.

எங்கள் குறையை கேட்க யாரும் இல்லை

இதுதொடர்பாக ஆட்டோ நகர் தொழிலாளர் நலச்சங்க செயலர் ர.பாஸ்கர் கூறியதாவது:

``சென்னையில் சுமார் 12,000 ஆட்டோக் கள் ஓடுகின்றன. அதில் தினமும் 1,000 ஆட்டோக்கள் பழுது பார்க்க வருகின்றன. 15 வகையான சிறு சிறு வேலைக்கு 500 ஆட்டோக்கள் வருகின்றன. இங்கிருந்து ஆப்பூர் 54 கிமீ தூரத்தில் உள்ளது. அங்கு எந்த ஆட்டோவும் வராது. எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

எங்களை ஆப்பூருக்கு அனுப்பிவிட்டால், இதுபோன்ற பணிகளைச் சென்னை நகருக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது. ஆப்பூரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஓராண்டு அவகாசம் வழங்கிவிட்டு, அதன் பின்னரே எங்களை அப்புறப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை கேட்க எந்த அதிகாரிகளும் தயாராக இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x