Published : 28 Jun 2024 07:31 AM
Last Updated : 28 Jun 2024 07:31 AM
சென்னை: கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்த மாணவி, 2022 ஜூலை 13-ம் தேதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாணவியின் மரணத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று தகவல் பரவியதையடுத்து, பள்ளி வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
கலவரம் தொடர்பாக விசாரிக்கசிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளித் தாளாளர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "இந்தக்கலவரம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 166பேரின் செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக கூட்டத்தைக் திரட்டிய திராவிட மணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியையும் போலீஸார் இதுவரை விசாரிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, “இந்தசம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் அவர்களிடம் ஏன் விசாரணைநடத்தவில்லை. நல்ல நாள் வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒருவேளை இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால், வழக்கில் சேர்ப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
காவல் துறை தரப்பில், “செல்போன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு விசாரணை இன்னும் 4 மாதங்களில் முடிக்கப்படும். அவர்கள் இருவருக்கும் எதிராக ஆதாரங்கள் இருந்தால், அவர்களும் வழக்கில் சேர்க்கப்படுவர். விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்”என்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT