Published : 28 Jun 2024 06:00 AM
Last Updated : 28 Jun 2024 06:00 AM

சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் 75,000 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை

சென்னை ஐசிஎஃப் ஆலையில் நேற்று முன்தினம் 75,000-வது ரயில் பெட்டி தயாரித்து சாதனை படைக்கப்பட்டது. இதை ரயில்வே ஊழியர்கள், உயர் அதிகாரிகள் நேற்று கொண்டாடினர்.

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் மொத்தம்75,000 ரயில் பெட்டிகள் தயாரித்துசாதனை படைக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1955-ம் ஆண்டு அக்.2-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், ரயிலின் உட்புறப் பாகங்களை பொருத்தும் தொழிற்சாலையாக இருந்தது.

இதன் பிறகு, படிப்படியாக உயர்ந்து, ரயிலின் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக உயர்ந்தது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதுதவிர, ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி,சுற்றுலாவுக்கான ரயில்பெட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, வந்தேபாரத் என்னும் அதிவேக ரயில்களும் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் நேற்றுடன் 75,000 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப் தனது 68-வது ஆண்டில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

இங்கு புதன்கிழமை 75 ஆயிரமாவது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. ஜூன் 26 நிலவரப்படி 75,000 பெட்டிகளைக் கடந்து 75,017 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அதிகபட்சமாக 31,349 சாதாரண ஏசி அல்லாத பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 8,152 எல்.எச்.பி. பெட்டிகளும் (ஏசி அல்லாதது), 6,895 எல்.எச்.பி. ஏசி பெட்டிகளும், 752 வந்தே பாரத் சேர் கார் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கு 875 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு முன்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒரேஆண்டில் தயாரித்து சாதனை படைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 2,900 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆர்டர்களை ரயில்வே வாரியம் வழங்கும்போது, கூடுதல் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x