Published : 09 May 2018 07:55 AM
Last Updated : 09 May 2018 07:55 AM

திண்டுக்கல் மாவட்ட கிராமங்களிலும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்?: 26 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்ததால் மக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரெங்கமலையில் பெரும் வெடிச்சத்தம், அதிர்வுகள் குறித்த மர்மம் விலகாத நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. இங்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் பல்வேறு கிராமங்களில் இதுவரை 26 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. 3 வாகனங்களில் வரும் பத்துக்கும் மேற்பட்டோர் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

மக்கள் தங்கள் கிராமத்துக்கு குடிநீர் வழங்கத்தான் ஆழ்துளை கிணறு அமைக்கின்றனர் என நினைத்தனர். ஆனால் கிணறு அமைத்த பிறகு அதை மூடி பூட்டிவிட்டுச் சென்ற பிறகுதான், தங்களுக்கு பயன்படாமல் எதற்கு இதை அமைத்தனர் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் மக்கள் கேட்டதற்கு, எங்களுக்கு எதுவும் தெரியாது என்ற பதிலே கிடைத்தது.

ஆத்தூர் அருகே சித்தரேவு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அய்யம்பாளையத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் குஜராத் நிறுவனம் ஈடுபட்டது.

ரசாயன திரவம் ஊற்றினர்

அப்போது அங்கு வந்த கிராம இளைஞர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கண்காணித்தனர். அப்போது அதற்குள் ரசாயன திரவப் பொருட்களை ஊற்றியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்தவர்கள், “குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும்போது ரசாயன திரவங்களை ஏன் ஊற்றுகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், ‘நாங்கள் மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்கிறோம். ஆழ்துளை கிணறு அமைப்பது மட்டுமே எங்கள் வேலை. இதை எதற்காக பயன்படுத்துவர் என்று எங்களுக்கு தெரியாது. இதற்கு மேல் எங்களிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ எனக் கூறியுள்ளனர்.

சரியான விளக்கம் கிடைக்காததால் அய்யம்பாளையம் இளைஞர்கள் தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் பணியை தடுத்த இளைஞர்கள் மீது புகார் தருமாறு வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மறுத்துவிட்டு பணியில் ஈடுபட்டவர்கள் சென்றுவிட்டனர்.

இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் அதிகாரிகள் யாரும் இங்கு இல்லை. இதனால், டெல்டா மாவட்ட பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிப்பதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். தங்கள் அச்சத்தைப் போக்க அதிகாரிகள் விளக்கம் தரவேண்டும் என்கின்றனர்.

குட்டி விமானம், வெடிச்சத்தம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கமலை, கருமலை பகுதிகளில் குட்டி விமானங்கள் பறந்ததும், அவ்வப்போது பெரும் அதிர்வுடன் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெடிச்சத்தம் கேட்டதும் ஏற்கெனவே புரியாத புதிராக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு மேலும் ஒரு புதிராக மத்திய அரசின் திட்டம் உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா கூறியது: மத்திய அரசு நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. நேரடியாக அவர்களே நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கலாம். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கூறி கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான காரணத்தை விசாரிக்க செய்யலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x