Published : 28 May 2018 07:52 AM
Last Updated : 28 May 2018 07:52 AM
மின் நுகர்வோர் தங்கள் குறைகள், பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் தவறான மின்கட்டண பில்லைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அடுத்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஜெகன்னாத் ஷெல்கே. காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த மார்ச் மாதத்தில் இவரது வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணம் ரூ.8.45 லட்சம் என மாநில மின்சார வாரியத்திடம் இருந்து இவருக்கு சமீபத்தில் பில் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்துப் புகார் தெரிவித்தார். இவர் பலமுறை கூறியும், அதிகாரிகள் அவரது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.
ஏற்கெனவே கடன் பிரச்சினையால் தவித்துவந்த ஜெகன்னாத், மின்கட்டணம் காரணமாக மேலும் மன உளைச்சல் அடைந்தார். இந்த விரக்தியில் அவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில், ஜெகன்னாத்தின் வீட்டில் கடந்த மார்ச் மாத மின்நுகர்வு 611.78 யூனிட்கள் மட்டுமே. இதை கணினியில் பதிவு செய்த ஊழியர் தவறுதலாக 6,117.8 யூனிட் என்று தவறுதலாக பதிவு செய்துள்ளார். அதனால்தான், ரூ.2,800 கட்டணத்துக்கு பதிலாக, ரூ.8.45 லட்சம் கட்டணம் வந்துள்ளது என தெரியவந்தது. இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்த அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்தால், தமிழக மின் நுகர்வோர் எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து கேட்டபோது, தமிழ்நாடு மின்வாரிய இயக்குநர் (நிதி) மனோகரன் கூறியதாவது:
தவறான மின்கட்டண பில்லால் விரக்தியடைந்து, ஜெகன்னாத் தற்கொலை செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. மின்நுகர்வோர் தங்களது வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு இதுபோன்று தவறுதலான பில் வந்தால் பதற்றம் அடையத் தேவையில்லை. தங்கள் பகுதியில் வந்து மீட்டர் கணக்கு எடுக்கும் கணக்கீட்டாளரிடம் முதலில் புகார் தெரிவிக்க வேண்டும். அவரிடம் தீர்வு கிடைக்காவிட்டால், கணக்கீட்டு ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
அங்கும் பிரச்சினை தீராவிட்டால், வருவாய் கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், உதவி கணக்கு அலுவலர், மதிப்பீ்ட்டு அதிகாரி, செயற்பொறியாளர் என படிப்படியாக புகார் தெரிவிக்கலாம். இங்கெல்லாம் பிரச்சினை தீரவில்லை என்றால், மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் தெரிவிக்கலாம். இந்த அமைப்பின் தலைவராக மின்வாரிய செயற்பொறியாளர் இருப்பார். கூடுதலாக 2 பேரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நியமிப்பார். இதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனில், சென்னை எழும்பூரில் உள்ள மின்குறைதீர்ப்பாளரிடம் (ஆம்புட்ஸ்மேன்) மேல்முறையீடு செய்யலாம். அதன் பிறகும், பிரச்சினை தீரவில்லை என்றால், இறுதியாக நீதிமன்றத்தை நாடலாம்.
இவ்வாறு மனோகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT