Published : 27 Jun 2024 08:52 PM
Last Updated : 27 Jun 2024 08:52 PM
திருச்சி: கண்ணூத்து மலைக் கிராமத்தில் முதன்முறையாக பிஎஸ்என்எல் 4ஜி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தொகுதி எம்பி ஜோதிமணி இல்லாததால் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டியை அடுத்த கண்ணூத்து கிராமத்தில் பிஎஸ்என்எல், தனியார் செல்போன் கோபுரங்கள் இல்லை. இதனால் அந்த கிராம மக்கள் செல்போன் பேச வேண்டும் என்றால், தங்களது ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சிறு அணைக்கட்டு பகுதிக்கு சென்று தான் பேச முடியும் என்ற நிலை இருந்தது. பிஎஸ்என்எல் சார்பில், 4ஜி சேவை வழங்குவதற்காக யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன் ஃபன்ட் (யுஎஸ்ஓஎப்) திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் செல்போன் டவர் (சோலார் பேனல் வசதியுடன்) அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கியது.மேலும், அந்த ஊரில் செல்போன் சேவை கிடைப்பதற்காக, செல் ஆன் வீல் எனும் தற்காலிக வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து, கண்ணூத்து கிராமத்தில் 4ஜி சேவையுடன் செல்போன் கோபுரம் திறப்பு விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. இதை அந்த கிராம மக்கள் திருவிழா போல கொண்டாடத் தயாராகி வந்தனர். ஆனால், தொகுதி எம்பி ஜோதிமணி டெல்லியில் இருப்பதால் விழாவை கிராம மக்கள் ஒத்தி வைத்தனர்.இதையடுத்து, சென்னையிலிருந்து பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் பனவத்து வெங்கடேஸ்வரலூ காணொலி வாயிலாக செல்போன் கோபுரம் செயல்பாடுகளை தொழல்நுட்ப ரீதியாக தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் அலுவலர்கள் கூறியது: “கரூர் எம்பி ஜோதிமணி இந்த செல்போன் கோபுரம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். அவர் டெல்லியில் இருப்பதால், கிராம மக்கள் அவர் வந்த பிறகு விழா நடத்தலாம், என கூறிவிட்டனர். இதனால் செல்போன் கோபுரம் தொழில்நுட்ப ரீதியாக திறக்கப்பட்டுள்ளது. எம்பி ஜோதிமணி வந்த பின் விமரிசையாக விழா நடைபெறும்,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT