Last Updated : 27 Jun, 2024 07:55 PM

 

Published : 27 Jun 2024 07:55 PM
Last Updated : 27 Jun 2024 07:55 PM

தமிழக அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த சுந்தர.விமலநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள பாதை வசதியில்லை.

இது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதற்கு எதிரான நடவடிக்கையாகும். ஆகவே, தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள பாதை, சக்கர நாற்காலி, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்திட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ''இதே கோரிக்கை தொடர்பாக 2021-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் 2021-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x