Published : 27 Jun 2024 07:20 PM
Last Updated : 27 Jun 2024 07:20 PM
வேலூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காமல் சட்டப்பேரவைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
வேலூரில் பாஜக தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று (ஜூன் 27-ம் தேதி) பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல் சட்டப்பேரவைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பேசுவதற்குகூட அனுமதிக்காமல் அவர்களின் குரல் வலையை நெரிப்பது போல் சபாநாயகர் நடந்து கொண்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது.
கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த சமயத்தில் வயிற்றுவலி, வலிப்பு நோய் காரணமாக இறந்து போனதாக உண்மையை மறைக்கும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் தகவல்களை வெளியிட்டார். முதல்வர் அல்லது அமைச்சர் முத்துசாமி கூறாமல் ஆட்சியர் இதுபோன்ற தகவலை வெளியிட்டிருக்க மாட்டார். இதன்மூலம், இந்த அரசுக்கு பிரச்னையை மூடிமறைக்க வேண்டும் என்ற தீயநோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. அதனால்தான் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகிறேன். மடியில் கனம் இருப்பதால் ஸ்டாலினுக்கு பயம் இருக்கிறது.
இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசுதான் குற்றவாளி என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் காவல் துறையினர் மாநில அரசின் மிக மோசமான அடிமைகளாக நடத்தப்படுவது வன்மையாக கண்டனக்குரியது. சவுக்கு சங்கர் பெண் காவலர் குறித்து இழிவாக பேசியது தவறுதான். அவர் மீது எடுத்த நடவடிக்கை சரியானதுதான். ஆனால் மத்திய நிதியமைச்சர் குறித்து ஒரு யுடியூப் சேனலில் அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக, தி.க.காரர்கள் என்றால் அவதூறாக பேசினாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி 2014-ம் ஆண்டில் இந்தியாவிலே இளம் விதவைகள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம்தான் என்றார். இப்போது அவர் அதனை கழுத்தில் எழுதிப் போட்டுக் கொள்ள வேண்டும். ஆங்கில நாளிதழ் நடத்திய ஒரு ஆய்வில் 495 விதவைகளில் 188 பேர் கள்ளச் சாராயத்தால் கணவனை இழந்தோம் என்று கூறியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு ஆறு சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே பாஜகவின் வளர்ச்சி தெளிவாக மக்களுக்கு தெரிய தொடங்கியுள்ளது'' என்றார். அப்போது, பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT