Published : 27 Jun 2024 06:01 PM
Last Updated : 27 Jun 2024 06:01 PM

“கள்ளக்குறிச்சி பிரச்சினையை பேரவையில் எழுப்பியபோது...” - உண்ணாவிரத மேடையில் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்

சென்னை: “திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தாலும், நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறாது. ஒரு நாளைக்கு 5 துறைகளின் மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, திமுக அரசு சம்பிரதாயத்துக்காக இந்த மானியக் கோரிக்கையை நடத்தி வருகிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டிப்பதாகக் கூறி, சென்னை எழும்பூரில் இன்று (வியாழக்கிழமை) அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “அற வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொலைபேசியிலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.

இந்தியாவே தமிழகத்தை நோக்கிப் பார்க்கிற வகையில், கள்ளக்குறிச்சியில் நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. விலை மதிக்க முடியாத பல உயிர்களை இழந்து இருக்கிறோம். இந்தச் சம்பவம் எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? இதுதான் மக்களுடைய கேள்வி. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலங்களால், கள்ளக்குறிச்சி இன்று கண்ணீரில் மிதந்துக் கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. அதோடு மாதவச்சேரி, கேசவசமுத்திரம், கருணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 63 பேர் கள்ளச் சாராயம் அருந்தி இன்று வரை பலியாகி உள்ளனர்.இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில் பலர் அபாயக் கட்டத்தில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. பலருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது. இன்னும் பலருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எனவே, இதை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், அதிமுக சார்பில், கள்ளக்குறிச்சிக்கு சென்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, இறந்தவர்களின் உடல்களுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினேன். இதை எல்லாம் அரசின் கவனத்துக்கு சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில்தான், பிரதான கட்சியான அதிமுக சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டோம்.

ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் எங்களை அனுமதிக்கவில்லை. 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில், பேரவைத் தலைவருக்கு விதிப்படி மனு அளித்து, எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி கேட்டோம். சட்டமன்றத்தில்தான் மக்களுடைய பிரச்சினைகளை பேச முடியும். மக்கள் பாதிக்கப்படும்போது, பிரதான எதிர்க்கட்சியின் கடமை, அந்த பாதிப்புகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் அந்த பிரச்சினையை எழுப்பினோம். ஆனால், ஒவ்வொரு நாளும் நாங்கள் கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும்போது, எங்களை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்கிறார்.

எங்களை பேச அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? எங்களை வெளியேற்றிவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி குறித்து 15 நிமிடம் விவரிக்கிறார். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா? எதிர்க்கட்சிகளைப் பேசவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கு பதில் அளிப்பதே ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அடையாளம். ஆனால், திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில், சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியே கிடையாது. மானியக் கோரிக்கையின் போது, பத்து நிமிடங்கள் மட்டும எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கப்படும். அந்த பத்து நிமிடத்தில் என்ன பேச முடியும்?

ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், நான் முதல்வராக இருந்த காலத்திலும், எதிர்க்கட்சிகள் பேச சுமார் 40 நிமிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நடைபெறும் சட்டப்பேரவைகளில் இப்படிப்பட்ட நிகழ்வே இல்லை. மூன்றாண்டு காலத்தில் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேச மொத்தம் 15 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்துக்குள்தான், துறை சார்ந்த தமிழக பிரச்சினைகளை நாங்கள் பேச வேண்டும். இது எப்படி சாத்தியம் ஆகும்?

திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தாலும், நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறாது. தற்போது ஒரு வாரமாக மானியக் கோரிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 20-ம் தேதி இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு அவையை ஒத்திவைத்தனர். அதன்பிறகு, 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டமன்றம் நடைபெறும். 29-ம் தேதி முதல்வரின் பதிலுரை. சுமார் 7 நாட்கள்தான் சட்டமன்றம் நடைபெறுகிறது.

இந்த 7 நாளில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 5 துறைகளின் மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, திமுக அரசு சம்பிரதாயத்துக்காக இந்த மானியக் கோரிக்கையை நடத்தி வருகிறது,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x