Published : 27 Jun 2024 03:48 PM
Last Updated : 27 Jun 2024 03:48 PM

“ஆகச் சிறந்த நகைச்சுவை!” - ஸ்டாலினின் ‘ஓசூர் சர்வதேச விமான நிலைய’ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்வினை

சென்னை: "ரூ.30 கோடி செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக முதல்வர் ஸ்டாலின் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கவுள்ளதாக கூறுகிறார். இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச் சிறந்த நகைச்சுவை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் விகே சிங் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஏற்கெனவே கடந்த 2022-ம் ஆண்டு, 110ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச் சிறந்த நகைச்சுவை.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது என்ன? - முன்னதாக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, "திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள். வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழகத்தை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழகத்தின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

2022-ம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர்-1’ மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழகம், தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை, 2030-ம் ஆண்டுக்குள் ‘ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக’ உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழக அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உயர்ந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x