Published : 25 May 2018 09:05 AM
Last Updated : 25 May 2018 09:05 AM
பொதுப்பணித் துறையும் சென்னை மாநகராட்சியும் போட்டி போட்டுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால், விருகம்பாக்கம் கால்வாயில் 6 மாதங்களாக குப்பைகள் தேங்கி துர்நாற்றமும் கொசுத் தொல்லை யும் நிரந்தரமாகி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
விருகம்பாக்கம் அருகே சின்மயா நகரில் இருந்து விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் தொடங்குகிறது. அங்கிருந்து எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம், பெரியார் பாதை, அண்ணா நெடும் பாதை, சூளைமேடு, மேத்தா நகர் வழியாக 6.4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த கால்வாய் மேத்தா நகரில், நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இக்கால்வாயில் குப்பை களும், கட்டிட இடிபாடுகளும் மலைபோல குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேட்டுக்கு பஞ்சம் கிடையாது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி களிடமும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் பலனில்லை. கடந்தாண்டு பருவமழை தொடங்கிய பிறகுதான் இக்கால்வாயில் குப்பைகளை அகற்றினர். ஓரிரு நாளில் 8 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு சரிவர குப்பைகள் அகற்றாததால், இப் போது மலைபோல குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வடஅகரம் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு, செயலாளர் ஆ.திருஆரூரன் ஆகியோர் கூறியதாவது:
கடந்த மார்ச் 12-ம் தேதி சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரியைச் சந்தித்து புகார் மனுவை அளித்தோம். மனுவை மண்டலம் 9 அலுவலகத்துக்கு அனுப்பச் சொன்னார். மறுநாளே மேத்தா நகரில் விருகம்பாக்கம் கால்வாய் பகுதிக்கு ஜேசிபி ஒன்று வந்து பெயரளவில் குப்பையை அகற்றிவிட்டுப் போனது. இதையடுத்து கால்வாயை தூர்வாரக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் புகார் அளித்தோம். பலனில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த புகார் குறித்து செயற்பொறியாளர் கவனத்துக்கு கொண்டுபோய், பொதுப்பணித் துறையிடம் இருந்து பொக்லைன் வரவழைத்து கால்வாயை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்து வருகி றோம்” என்றார்.
மழை தொடங்குவதற்கு முன்பே இக்கால்வாயில் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
கூவம் ஆற்றின் பல பகுதிகளில் வலையைக் கட்டிவைத்து குப்பைகளை ஆங்காங்கே சேகரித்து அகற்றுவதுபோல, இந்த கால்வாயிலும் செய்வதே நிரந்தர தீர்வாக அமையும் என்பதே மக்களின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT