Last Updated : 26 Jun, 2024 10:01 PM

1  

Published : 26 Jun 2024 10:01 PM
Last Updated : 26 Jun 2024 10:01 PM

வன்கொடுமை தடுப்புச் சட்ட விசாரணை வரையறைக்குள் கள்ளக்குறிச்சி சம்பவம் வராது: தமிழக எஸ்சி, எஸ்டி ஆணையம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் விசாரணை வரையறைக்குள் இப்பிரச்சனையை அடக்க இயலாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கருதுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணை தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர்கள் ரேகா பிரியதர்ஷினி, முனைவர் ரகுபதி ஆகியோர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் அருந்தி உயிரிழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வும் விசாரணையும் இன்று (ஜூன் 26) மேற்கொண்டனர். தமிழக அரசின் சார்பில் அனைத்து நிவாரணங்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என்றனர். பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களிடம் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பில், “ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்ததால் இறந்தவர்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்ததால் இதுகுறித்த உண்மையை கண்டறிவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். இதற்கான அறிக்கை வெளியிடுவோம்,” என்று கூறியிருந்தனர்.

அதன்படி இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த சம்பவத்தில் சுமார் 225 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கருணாபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சென்னை உட்பட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களும் இறந்தவர்களும் ஒருசமூகத்தை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள். செவ்வாய்க்கிழமை காலை வரை இறந்த 61 பேரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் 14 பேர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தோர் 9 பேர், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் 3 பேர் மற்றும் பட்டியல் சாதியைச் சார்ந்தவர் 24 பேர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் 9 பேர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் 21 நபர்கள் இறந்த பின்னரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவர்களிடம் விசாரித்தபோது, இவர்கள் இறந்ததை அவர்களுடைய உறவினர்கள் அவர்கள் இறந்துள்ளனர் என்பதை அறியாமலேயே அவர்கள் போதையில் இருப்பதாக எண்ணிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவ்வாணையம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்று தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்துப் பேசியதில் 3 பேர்களைத் தவிர மற்ற அனைவரும் குணமாகி இன்னும் சில நாட்களில் வீடு திரும்பும் நிலையில் உள்ளனர்.இக்குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் எல்லா சமூகத்தையும் சார்ந்தவர்கள் இருக்கின்றனர்.

போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ளவர்கள் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களாக இந்த சம்பவத்திலும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமூகங்கள், பழங்குடியின சமூகங்கள் என பல்வேறு சமூகத்தினர் இருக்கின்றனர். கருணாபுரம் காலனியில் நேர்ந்த ஒரு மரணத்துக்கு வந்திருந்தவர்களில் பலரும் இச்சாராயத்தை உட்கொண்டதாலேயே அங்கு மட்டும் 33 பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் (SC/ST) இறந்துள்ளனர். இக்காலனியில் பெருமளவில் இறப்பு நேர்ந்ததற்கு இதுவேகாரணம். இதே விற்பனையாளரிடமிருந்து வாங்கிக்குடித்த மற்றபகுதியைச் சேர்ந்தவர்களும் இறக்க நேரிட்டுள்ளது. இச்சமூகத்தில் நிலவும் பொதுவான சமூக பொருளாதார சிக்கலாகவே இது கருதப்பட்டு, இச்சிக்கலின் மூலவேரைக் கண்டறிந்து, இடையறாத விழிப்புணர்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

இச்சமூக விரோதச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சுமார் 21 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இவர்கள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே இந்நேர்வில், பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் விசாரணை வரையறைக்குள் இப்பிரச்சனையை அடக்க இயலாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கருதுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x