Published : 26 Jun 2024 05:57 PM
Last Updated : 26 Jun 2024 05:57 PM

“டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு நடந்தது பழனிசாமிக்கும் நடக்கும்” - ஆர்.எஸ்.பாரதி

சென்னை: "ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் நடந்தது போல், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் நடக்கும். மீண்டும் அந்த வழக்கை நான் நடத்த உள்ளேன்" என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி திமுக குறித்தும், என்னை குறித்தும் தவறான கருத்துகளை பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஏதோ உத்தமர் போல, அவரை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்தது போல பேசியிருக்கிறார். உண்மையை மறைக்காமல் அவர் பேசியிருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த காலத்தில் தனது சம்மந்திக்கும், மற்றவர்களுக்கு முறைகேடாக டெண்டர்களை கொடுத்ததில் நெடுஞ்சாலை துறைக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனை விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் நான் புகார் அளித்தேன். அவர்கள் விசாரிக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்பது உண்மை. அவ்வளவு பெரிய வழக்கை நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்தபோது சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்தோம். அரசு தரப்பும் பதில் மனு தாக்கல் செய்தது. இதன்பின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை எனக் கூறி தானாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அன்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை, இன்றைக்கும் கேட்கவில்லை. ஏனென்றால், சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியும். ரூ.570 கோடி பிடிபட்ட வழக்கில் எட்டு வருடமாக நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படி பல வழக்குகள் சிபிஐ-யில் நிலுவையில் உள்ளன. எனவே தான் சிபிசிஐடி விசாரணை என்றால் வழக்கை துரிதமாக முடிக்க முடியும் என்று கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையும், ஒரு நபர் விசாரணை குழுவையும் முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சிபிஐ விசாரணை கோருகிறார். தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்கிறார்.

டெண்டர் வழக்கை நான் வாபஸ் பெற்றேன் என பச்சை பொய் கூறுகிறார் அவர். வழக்கை அவரது ஆட்சியில் இருந்தபோது அவரது அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் தடை கேட்டு அதனடிப்படையில் தான் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது என்பதை முன்னணி ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளன. அதனை மறைத்து பச்சை பொய்யை தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தமிழக அரசின் காவல் துறை விசாரணைக்கு பிறகே எனது மனுவை வாபஸ் பெற்றேன். இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பில் அவர் நிரபராதி என்று கூறப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் வழக்கை தொடரலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

டான்சி ஊழல் வழக்கில் வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. வரலாறு தெரியவில்லை என்றால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளட்டும். டான்சி வழக்கில் எப்படி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாரோ அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் சிக்குவார். அவர் சவால் விடுத்ததால் விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் டெண்டர் வழக்கை மீண்டும் தொடர உள்ளேன். ஆயிரம் சவால் விடுக்கலாம், ஆனால், சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு நடந்தது போல் எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும்.

எனக்கு வயதானால் அவருக்கு என்ன கவலை. முதல்வர் ஸ்டாலின் சவால் விட்டு சட்டசபைக்கு அழைக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி செல்ல மறுக்கிறார். பல வழக்குகள் எடப்பாடி பழனிசாமி மீது அடுத்தடுத்து வரவுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. இது எல்லாம் பிற்காலத்தில் அவருக்கு என்னென்னஏற்படுத்த போகிறது என்பதை பார்ப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x