Last Updated : 26 Jun, 2024 05:39 PM

 

Published : 26 Jun 2024 05:39 PM
Last Updated : 26 Jun 2024 05:39 PM

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது ‘டான்டீ’ அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல: அரசு தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, குதிரை வெட்டி, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929-ம் ஆண்டு ‘தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து முன்னதாகவே தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கி, அவர்களை மலைப் பகுதியில் இருந்து காலி செய்யுமாறு கூறி வருகிறது.

இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடிவு செய்த பிறகுதான் அவர்களை மாஞ்சோலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் தற்போது தொழிலாளர்கள் மாஞ்சோலையில் தங்கியுள்ளனர். தமிழக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமான (டான்டீ) நிர்வாக இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 5 தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் எடுத்து நடத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட திட்டத்தை முதன்முதலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளிலும் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை போன்ற பகுதிகளிலும் செயல்படுத்தியது. பின்னர் 1976-ம் ஆண்டு இந்த திட்டம் கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் என மறு பெயரிடப்பட்டு 454 ஹெக்டேர் நில பரப்பளப்பில் 4 ஆயிரம் தொழிலாளர்களுடன் 6 நவீன தொழிற்சாலைகளுடன் செயல்பட்டு வருகிறது.

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக உருவான தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்திடம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய 5 இடங்களில் உள்ள தேயிலை தோட்டங்களையும், வனத்துறை ஒப்படைக்கும் பட்சத்தில் தேயிலை தோட்டங்களுக்கும் 700 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.எனவே இந்த தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்திடம் ஒப்படைப்பு செய்து தேயிலை தோட்டங்கள் மற்றும் 700 தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் அளித்துள்ள பதிலில், ‘மனுவில் குறிப்பிட்டுள்ள தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் எடுத்து நடத்துவது என்ற கோரிக்கை, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல’ என தெரிவித்துள்ளார்.

வாசிக்க > மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தவிப்பும் பின்புலமும் | HTT Explainer

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x