Last Updated : 26 Jun, 2024 04:26 PM

2  

Published : 26 Jun 2024 04:26 PM
Last Updated : 26 Jun 2024 04:26 PM

“கள்ளச் சாராய விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள்” - கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த குஷ்பு

கள்ளக்குறிச்ச கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். டெல்லி சென்று மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிக்கவுள்ளோம்” என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று புதன்கிழமை விசாரணை நடத்தினர். மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு கூறியது:“விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராய உயிரிழப்பில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது. இங்குள்ள அதிகாரிகள் அது தெரிந்திருந்தும், தெரியாதது போல நடந்துள்ளனர். இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிப்போம்.

சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு ஏதும் அறிக்கை தரவில்லை. இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாற்றதது ஏன் என்பது தெரியவில்லை. இங்குள்ள அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய குற்றம். மது அருந்துபவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும், அவ்வளவுதான். குடிக்க முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு ஆயிரம் காரணம் கிடைக்கும். இந்தப் பகுதியில் கள்ளச் சாராயம் எளிதாக கிடைத்திருக்கிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவரகள் சராசரியாக 3 பாக்கெட் வரை குடித்துள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி போலீஸ் இதுவரை என்ன செய்தது என்ற கேள்வி எழுகிறது. சிபிசிஐடி 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை அழித்ததாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என்று பாதிக்கப்பட்டோர் கூறினார்கள். இந்த கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்போம்” என்று அவர் கூறினார்.

போலீஸிடம் சரமாரி கேள்வி: இக்குழு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்குச் சென்றது. அங்கிருந்த போலீஸாரிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர். போலீஸாரிடம் குஷ்பு பேசுகையில், “சார், அந்தப் பொண்ணுக்கு 20 வயசுதான், குழந்தை இருக்கிறது, ஆனால் அவருடைய கணவர் இறந்துவிட்டார். இன்னொரு பெண் 2 மாத கர்ப்பிணி, ஏற்கெனவே 6 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அவருடைய கணவரும் இறந்துவிட்டார்.

இந்த கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் கூலி தொழிலாளர்கள். இவர்கள் கூலி வேலை செய்து தினமும் குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர். தற்போது அவர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தினர் நிற்கதியாய் நிற்கிறார்கள். கூலித் தொழில் செய்யும் 130 பேருக்கு கள்ளச் சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், போலீஸுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும்? என்ன சார் உங்களுக்கு தெரியவே தெரியாதுனு சொல்றீங்க, இதில் என்ன லாஜிக் இருக்கிறது,” என தொடர்ந்து கேள்வி கேட்டார்.

அதற்கு போலீஸார் , “கள்ளச் சாராய வழக்கில் அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்,” என்றனர். அதற்கு குஷ்பு, “கைது செய்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்து ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். ஒருவர் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள். அவர்கள் திருந்தும் அளவுக்கு தண்டனையே கிடைப்பதில்லை,” என குற்றம்சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x