Last Updated : 26 Jun, 2024 02:44 PM

 

Published : 26 Jun 2024 02:44 PM
Last Updated : 26 Jun 2024 02:44 PM

சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வரின் கடிதத்துக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை: வேல்முருகன்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மிக முக்கிய கோரிக்கையை மத்திய மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் கல்வி பொருளாதாரத்தில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தோம்.

இன்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சம வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் கிடைக்க ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தனித் தீர்மானித்தில் சொல்லப்பட்டிருந்தது.

இதில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தேன். சமூக நீதிக்கு எதிரான தீர்மானம், இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், முல்லைப்பெரியாறுக்கு எதிரான தீர்மானம், நீட்டுக்கு எதிரான தீர்மானம் அனைத்தையும் குப்பை தொட்டியில் வீசும் மத்திய அரசிடம் இந்த தீர்மானத்தை அனுப்பி வைத்தால் இதையும் குப்பை தொட்டிக்கு தான் அனுப்புவார்கள்.

ஏற்கனவே தமிழக முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடிதம் எழுதியதற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. மத்திய அரசு சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அவர்களிடத்தில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அதனால் அந்த சட்ட திருத்தத்தில் மத்திய அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பதுடன், ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்தை நடத்தவில்லை என்றால் தமிழக அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் திருத்தம் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்து பேசினேன்.

மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். கண்டிப்பாக எதிர்வரும் காலங்களில் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று நேர்மறையான பதிலை முதல்வர் ஸ்டாலின் அளித்து இருக்கிறார். சமூக நீதிக்கு போராடிய 21 போராளிகளில் 9 பேர் வாழ்ந்த இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றால் பிஹார், ஒடிசா போன்ற மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தது போல தமிழக அரசும் எடுக்க வேண்டும்.

பிஹார் மாநில உயர் நீதிமன்றம் அந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கவில்லை. இந்தியாவில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தடை இல்லை. 10.5% இடஒதுக்கீடு கேட்கும் வன்னியர்கள், மற்ற சமூகத்தினரை விட வேலைவாய்ப்பில், கல்வியில் என எந்த விதத்தில் பின்தங்கி உள்ளார்கள் என்ற தரவுகளை கொண்டு வரச் சொல்லி தான் உள்ளார்கள். எதிர்க்கட்சிகள் அவர்களுக்கான அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும்.

கேள்வி நேரத்துக்கு பிறகு நேரமில்லா நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச நேரம் தருகிறார்கள்.

எதிர்க்கட்சினருக்கு எனது வேண்டுகோள் கேள்வி நேரத்துக்கு பின் நேரமில்லா நேரத்தில் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய வைக்க வேண்டும். பேரவை தலைவர் நேரம் அளித்தார். ஆனால், அதிமுகவினர் வர மறுக்கிறார்கள். ஏற்கெனவே நாங்கள் பேசிய நேரத்தில் அவர்கள் பேசியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு பங்கு இருக்கிறதா இல்லையா என்பதை விட அரசு சட்டம் இயற்ற வேண்டும். ஒரு கிராமத்தில் கள்ளச் சாராய பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு அந்த பகுதி சார்ந்த அமைச்சர், அதிகாரிகள், ஆட்சியர் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசியல் ரீதியான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு அனைவரும் இதற்கு பொறுப்பேற்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x