Published : 26 Jun 2024 12:17 PM
Last Updated : 26 Jun 2024 12:17 PM
சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 'தமிழகம் முழுவதும் உள்ள 31, 336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு செலவினங்களை மேற்கொள்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பள்ளிகள் பராமரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நிர்வாக சிக்கல்களை தவிர்ப்பதற்காக வங்கி கணக்குகளை பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டங்களுக்கு தனியாக வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், பொதுவான பள்ளி பயன்பாட்டுக்கு தனியாக வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்விரு வங்கிக் கணக்குகள் தவிர்த்து வேறு இருப்பின் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்து அதில் உள்ள நிதியை பள்ளி பொதுவான வங்கிக்கணக்கில் வரவு வைத்து பராமரிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT