Published : 26 Jun 2024 05:20 AM
Last Updated : 26 Jun 2024 05:20 AM

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர், வி.பி.சிங்கின் 94-வது பிறந்த நாளையொட்டி, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின்94-வது பிறந்த நாளையொட்டி, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் இரா.வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், முதல்வர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,‘உத்தரப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவர் `சமூக நீதிக் காவலர்'வி.பி.சிங்.சமூகநீதி பயணத்தின் வெற்றியில் அவர் என்றும் வாழ்வார்’ என குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளப் பதிவில், ‘பிரதமர் பதவியை விடபிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றமேமுக்கியமென முழங்கிய துணிச்சலுக்கு சொந்தக்காரர். வி.பி.சிங் பிறந்த நாளில் அவரது பணிகளை போற்றுவோம். எத்தனை இடர்கள் வரினும் அவர் வழியில், சமத்துவசமுதாயம் அமைக்க அயராதுஉழைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் புரட்சி அத்தியாயத்தை எழுதியவர் வி.பி.சிங். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், ஆட்சியே போனாலும் பரவாயில்லை என அறிவித்தவாறு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்திக் காட்டியவர். அவர் தான் உண்மையான சமூகநீதியின் அடையாளம். அது தான் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை' என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், திராவிடர் கழக் தலைவர் கி.வீரமணியும் வி.பி.சிங்கின் பிறந்த நாளையொட்டி அவரதுபடத்துக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினார். அவர் வெளியிட்டஅறிக்கையில், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய காரணத்துக்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்த்தது பாஜக. எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்றுமார்தட்டிய மாவீரன்தான் வி.பி.சிங். சமூகநீதியைக் காக்க வி.பி. சிங்கின் பிறந்த நாளில் உறுதியேற்போம்' என தெரிவித்துஉள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தனது சமூக வலைதளப் பதிவில்,‘பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் பெயர் இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளியூட்டிய அவரது பணிகள் என்றும்போற்றப்படும். அவர் வழியில்சமூகநீதிக் காத்திட உறுதியேற்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x