Published : 26 Jun 2024 04:59 AM
Last Updated : 26 Jun 2024 04:59 AM
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி மனு கொடுத்துள்ளார்.
மனு அளித்துவிட்டு வெளியே வந்த பிறகு, செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்காது. சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, தமிழகம் முழுவதும் போலீஸார் கள்ளச் சாராய வேட்டை நடத்தி 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள்ளச் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதை முன்பே செய்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது.
மேலும், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடப்பதால், சட்டப்பேரவையில் அதுகுறித்து விவாதம்நடத்த வேண்டும் என்றும், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தினார்.
ஆனால், அதை நிராகரித்துவிட்டனர். அப்போதே இதுகுறித்து விவாதம் நடத்தி இருந்தால் இந்த உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.
காவல் துறைக்கு தொடர்பு: தவிர, கள்ளச் சாராய வியாபாரிகளுடன் காவல் துறைக்கு தொடர்பு இருப்பதால், மக்கள் ஏதாவது தகவல் தெரிவித்தால்கூட, அது உடனே கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சென்று விடுகிறது. இதனால் மக்களை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். அந்த பயத்தில்தான் கள்ளச் சாராய விற்பனை குறித்து போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் இந்த வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தியே ஆளுநரிடம் மனு கொடுத்தோம். அவரும்அந்த மனுவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கல்வராயன் மலையில் வனத்துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. அதற்கு வனத் துறை அதிகாரிகள் துணை போயிருக்கின்றனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தவறிய முதல்வர் தார்மிகப் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT