Published : 26 Jun 2024 05:56 AM
Last Updated : 26 Jun 2024 05:56 AM

மணல் குவாரி முறைகேடு குறித்து வருமான வரி, ஜிஎஸ்டி குழு விசாரணை நடத்த அமலாக்க துறை கடிதம்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள், அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்துவிசாரித்தனர். இறுதியில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும், பினாமி பெயர்களில் சில ஆவணங்கள் இருந்ததும், போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டிக்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றிருந்த நிலையில் கணக்கு புத்தகத்தில் வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிமுறைகேடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி முழுமையாக விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. விசாரணை குழுவுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது. இதனால், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x