Published : 26 Jun 2024 05:41 AM
Last Updated : 26 Jun 2024 05:41 AM

தமிழகத்தில் பெரிய அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டும் போதை நடமாட்டம் இல்லை என மறுக்கின்றனர்: ஆளுநர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்று மறுக்கிறார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நேற்று,‘போதைப்பொருள் கடத்தல் தொடர்பான, தேசிய அளவிலான விழிப்புணர்வு செயல்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த சம்பவம் மிகுந்த வலியைத் தருகிறது. போதைப் பொருட்களின் தாக்கம் போகப்போக மிகவும் மோசமாகி வருகிறது. இது மனிதனின் உடல் மட்டுமில்லாது மனதையும் பாதித்து, மனஅழுத்தம், தற்கொலை எண்ணத்தை உருவாக்குவதுடன், குற்றச்செயல் புரியும் அளவுக்கு மாற்றுகிறது.

போதையின் முக்கிய இலக்கே, இளைஞர்கள்தான். நம் எதிர்காலமாகிய இளைஞர்களை போதை அழிப்பதுடன், நம் நாட்டின் எதிர்காலத்தையும் குலைக்கிறது. தமிழகத்தில் என்னை சந்திக்கும் பெற்றோர், உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் அதிகளவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும், இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, தற்போது இங்கு போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்று மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் போதை பறிமுதல் அறிக்கைகளை கொண்டு தமிழகத்தில் எப்போது விசாரணை நடத்தினாலும், இங்கு கஞ்சா மட்டும் கிடைப்பதாகவும் இதர ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லை என்கிறார்கள்.

அதேநேரம், கடந்த 6 மாதங்களாக பத்திரிகை செய்திகளை பார்த்தால், மத்திய போதை தடுப்புபிரிவு நடத்திய சோதனைகளில், பெரிய அளவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தெரியும். போதைப் பொருள் விஷயத்தில் பெற்றோர் விழிப்புடன் இருக்கும்போது, ஏன் அமலாக்க துறையினர் விழிப்பாக இல்லை என்பதே எனது கேள்வி.

போதை நம் மாநிலத்தை அழித்துவருகிறது. கல்வி, சுகாதாரத்தில் நம் மாநிலம் சிறப்பாக உள்ளது.போதை பொருட்கள், கள்ளச்சாராய பயன்பாட்டை தடுக்காவிட்டால் மாநில எதிர்காலம் பாதிக்கப்படும். பொதுமக்கள் உயிருடன் நாம் விளயைாடக்கூடாது. போதை விநியோகத்தை கட்டுப்படுத்துவது அமலாக்க துறையினர் கையில்தான் உள்ளது.

செயற்கை போதைப் பொருட்கள் பள்ளி பகுதிகளில் சிறு பாக்கெட்களில் கிடைக்கிறது. ஆனால், அமலாக்கத் துறையினரிடம் கேட்டால் பறிமுதல் ஏதும் இல்லை என்கின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கதாகும். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டுமோ அந்த உதவிகளை செய்கிறேன். இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை. போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறோம்.

போதைப்பொருள் குறித்ததேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில், தமிழகத்துக்கு பாகிஸ்தானின் கராச்சி, துபாயில்உள்ளவர்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் வரவழைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. போதைப்பொருள் தனிமனித பிரச்சினையல்ல. சமூக பிரச்சினை. நிலையற்ற தன்மையை உருவாக்குவதுடன் குற்றங்களையும் அதிகரிக்கச்செய்யும்.

தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் ஏ.கே.47 துப்பாக்கியும் கிடைத்துள்ளது. இது மோசமான நிலையாகும். இந்த விஷயத்தில் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. இதில் கட்சி, அரசியல் எதுவும் நுழையக்கூடாது.போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பேசினார்.

ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்: தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரம் தற்போது பெரும் சர்சசையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரை சந்தித்த அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர், பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். இதுதவிர, நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக அரசை மறைமுகமாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். தொடர்ந்து அவர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x