Published : 26 Jun 2024 08:42 AM
Last Updated : 26 Jun 2024 08:42 AM

சிபிஐ விசாரணை கேட்பது ஏன்? - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘‘தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர், தற்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா?’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆர்ப்பாட்டம் மற்றும் சிபிஐ விசாரணை கோரியது தொடர்பாக பேசியதாவது:

அதிமுகவினர் நேற்று (ஜூன் 24)ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம்தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலே கூட திரும்பத் திரும்ப சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியுள்ளனர்.

முறைகேடு வழக்கு: இதே எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது, அவர் மீது சிபிஐ விசாரணை கொண்டு வரப்பட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதில் முறைகேடு நடந்திருக்கிறது, அதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றம் சென்றபோது, அதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட் டது.

சிபிஐ மீது நம்பிக்கை இருந்தால், அந்தச் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால்,சிபிஐ மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று முழங்குகின்றார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x