Published : 25 Jun 2024 07:04 PM
Last Updated : 25 Jun 2024 07:04 PM

‘ஜெய் பீம்’ முதல் ‘உதயநிதி வாழ்க’ வரை: தமிழக எம்.பி.க்களின் பதவியேற்புக்குப் பிந்தைய முழக்கங்கள்

மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுதா, திருமாவளவன்

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்புக்குப் பின் ‘ஜெய் பீம்’, ‘ஸ்டாலின் வாழ்க’, ‘உதயநிதி வாழ்க’, ‘தமிழ் வெல்க’, ‘அரசியலமைப்பு வாழ்க’ முதலான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், "மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன். வாழ்க இவ்வையகம்! வாழ்க தமிழ்! ஜெய் ஜகத்!" என தமிழில் கூறி பதவியேற்றார். பதவியேற்பு உறுதிமொழியோடு, “சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மீதான வெட்ககரமான தாக்குதலை நிறுத்துங்கள். ஜெய் பீம்! ஜெய் சம்விதான் (அரசியலமைப்பு)!” என்றும் அவர் கூறினார்.

அவரைப் போலவே, திமுக எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்றபின் பின் "வேண்டாம் நீட், Ban நீட்" என முழக்கமிட்டார். முன்னதாக, ‘பெரியார் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க’ என்றும் தயாநிதி மாறன் முழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதவியேற்ற பின் ‘ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க’ என்றார். இதேபோல் கனிமொழி எம்.பி. பதவி ஏற்ற பிறகு ‘அரசியலமைப்பு வாழ்க’ முழக்கமிட்டார். துரை வைகோ பதவியேற்புக்குப் பின் ‘சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் வாழ்க. மனிதநேயம் பரவட்டும்’ என்றார். அதேபோல், விசிக எம்.பி ரவிக்குமார் உறுதிமொழி கூறிய பின் ‘வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம் - சமூக நீதி வெல்க’ என கூறினார்.

கதிர் ஆனந்த் பதவியேற்றபின் ‘வருங்காலம் எங்கள் உதயநிதி... வாழ்க தமிழ்நாடு, ஸ்டாலின் வாழ்க’ என முழக்கமிட்டார். கலாநிதி வீராசாமி, ‘பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க. திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க!’ என முழக்கமிட்டார். தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் பதவியேற்றபின் ‘வளர்க முத்தழிறிஞர் புகழ்! வாழ்க தளபதி! வாழ்க தமிழ்த் திருநாடு’ என முழக்கமிட்டார். திமுக எம்பி செல்வம் ‘பெரியார் அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி வாழ்க’ என முழக்கமிட்டார்.

கிருஷ்ணகிரி தொகுதி எம்பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார். பின்னர் அவர் ‘ஜெய் தமிழ்நாடு’ என முழங்கினார். தருமபுரி எம்.பி மணி பதவியேற்ற பின்னர்’ ‘கருணாநிதி, ஸ்டாலின் வாழ்க’ என முழக்கமிட்டார். திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை ‘வாழ்க தமிழ்! கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க’ என்று முழங்கியதுடன், வித்தியாசமாக ‘பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க’ என முழக்கமிட்டார். ஆரணி எம்பி தரணிவேந்தனும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோருடன் ‘எ.வ.வேலு வாழ்க’ என முழக்கமிட்டார். திமுக எம்பி மலையரசனும் ‘கருணாநிதி, தளபதி, ஸ்டாலின், எ.வ.வேலு வாழ்க’ என முழக்கமிட்டார்.

சேலம் எம்பி டிஎம் செல்வகணபதி பதவியேற்ற பின் ‘வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு; கருணாநிதி, ஸ்டாலின் வாழ்க, வருங்கால தமிழ்கம் உதயநிதி வாழ்க’ என முழங்கினார். தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பதவியேற்றார். பின்னர் கோவை செழியன், கரூர் முத்துகவுண்டர் புகழ், ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார்.

திருப்பூர் சிபிஐ எம்பி சுப்பராயன் தமிழில் பதவியேற்ற பின், ‘வாழிய செந்தமிழ்! வாழிய நற்ற தமிழர். வாழிய பாரத மணித்திருநாடு’ என முழக்கமிட்டார். டிஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய இருவரும் பதவியேற்ற பின்னர் எந்த முழக்கங்களையும் எழுப்பவில்லை. கோவை கணபதி ராஜ்குமார் பதவியேற்ற பின், ‘வாழ்க தமிழ். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க. உழைத்த தொண்டர்கள், பெற்ற அன்னை குடும்பத்தாருக்கும் நன்றி’ என்றார்.

பொள்ளாச்சி ஈஸ்வரசாமி தமிழில் பதவியேற்ற பின்னர் ‘பெரியார், அண்ணா, கருணாநிதி ஸ்டாலின், உதயநிதியை வாழ்த்தி’ முழக்கமிட்டார். மேலும், ‘எதிர்காலம் சின்னவர்’ என உதயநிதியை குறிப்பிட்டார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், நாகை எம்பி செல்வராஜ், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் ‘வெல்க மார்க்சியம்’ என முழக்கமிட்டனர். பெரம்பலூர் தொகுதி எம்பி அருண்நேரு, கரூர் எம்பி ஜோதிமணி தமிழில் பதவியேற்றனர்.

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா, ‘தமிழ் கடவுள் முருகப் பெருமான் மீது உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று கூறி பதவியேற்றபின் ராகுல் காந்தியை வாழ்த்தி முழக்கமிட்டதோடு, ‘ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ’ எனவும் முழங்கினார். தஞ்சை தொகுதி எம்பி முரசொலி, ‘கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க’ என்றார். மேலும், காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்.

தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் எந்த முழக்கமும் எழுப்பவில்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் படத்தை சபையில் எடுத்து காட்டினார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ‘இந்திய அரசியலமைப்பு வாழ்க! ஜெய்ஹிந்த்!’ என்று முழக்கமிட்டார். தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஶ்ரீகுமார் ‘அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வாழ்க’ என முழக்கமிட்டார்.

நாகர்கோவில் தொகுதி எம்பி விஜய் வசந்த் ‘காமராஜர், ராஜீவ் காந்தி வாழ்க’ என முழக்கமிட்டார். ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி ‘வாழ்க தமிழ், மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம்’ என முழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x