Published : 25 Jun 2024 06:45 PM
Last Updated : 25 Jun 2024 06:45 PM
மதுரை: தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் உள்ளது. பனை மரத்திலிருந்து நுங்கு, பனை ஓலை, பதநீர், பனங்கற்பட்டி போன்ற பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. தமிழகத்தில் ஏராளமானவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
மதுப்பழக்கத்தால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள், சங்க காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கள்ளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் சூட்டை குறைப்பதோடு வைட்டமின் பி2, பி12 உள்ளிட்ட பல சத்துக்களும் அதில் உள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 47-வது பிரிவுபடி குடிமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் மது உற்பத்தி மற்றும் விற்பனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே உடல் நலனுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கள்ளை இறக்க அனுமதி வழங்க வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. இதனால் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT