Published : 25 Jun 2024 11:11 AM
Last Updated : 25 Jun 2024 11:11 AM

அரசு சட்டக் கல்லூரிகளில் ‘சட்டத்தமிழ்’ புதிய பாடத் திட்டம் அறிமுகம்: அமைச்சர் அறிவிப்பு

அமைச்சர் ரகுபதி

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் 'சட்டத்தமிழ்' எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டம் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டு முதல் 'சட்டத்தமிழ்' எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வள மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும். 6 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் மொத்தம் 480 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர். சீர்மிகு சட்டப் பள்ளிகளில் புதிதாக 2 முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர்களுக்காக 3505 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.21.56 கோடியில் மாணவர் விடுதி கட்டிடம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்காக போதை மருந்துகள் மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டம் 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திருநெல்வேலியில் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், மதுரையில் தலா ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x