Published : 25 Jun 2024 11:00 AM
Last Updated : 25 Jun 2024 11:00 AM
சென்னை: சென்னை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைவில் சட்டத் திருத்தம் கொண்டுவர இருப்பதாக, நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா உறுதியளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் மாடுகளை பிடித்து தொழுவங்களில் அடைப்பது போன்று, நாய்களையும் அடைக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, நாய்களை பிடித்து அடைத்து வைக்க சட்டத்தில் இடம் இல்லை. இருப்பினும் சென்னை மாநகரில் நிலவும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் தீர்வு காணப்படும். கரோனா பரவல் காலத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியாத நிலையால் நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. தற்போது நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது என்றார்.
பின்னர் கூட்டத்தில், சாலையில் சுற்றித் திரியும் பெரிய மாடுகளை பிடிக்க ஏற்கெனவே 5 மண்டலங்களில் தலா 5 மாடுபிடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதர 10 மண்டலங்களிலும் தலா 5 பணியாளர்களை நியமிக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனை பரப்பு 2500 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லாமல், சுய சான்றிதழ் அடிப் படையில் உடனடியாக ஒற்றைச் சாளர அமைப்பில் கட்டிட அனுமதி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
இதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.566 கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி வரையறுத்துள்ளது. இதற்கும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023-ல் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகளில் தளர்வு செய்து திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தவும் மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலைக்கு `டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சாலை' என பெயர் சூட்ட அரசாணை பெறப்பட்டுள்ளதற்கும், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் வழங்கும் மின் திறன் வகை (III-B) அடிப் படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 183 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பவும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 127 தொடக்க மற்றும் நடு நிலை பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க 254 ஆசிரியர், 127 ஆயாக்களை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போரூர் ஏரியின் கரையில் ரூ.5.74 கோடியில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கியும், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சாலைகளில் 6 இடங்களில் மொத்தம் ரூ.4.50 கோடியில் பூங்காக்கள் அமைக்கவும், அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.300-லிருந்து ரூ.325 ஆக உயர்த்தி வழங்கவும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மொத்தம் 85 தீர்மானங்கள் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT