Published : 25 Jun 2024 10:52 AM
Last Updated : 25 Jun 2024 10:52 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு இன்று ஒரு நாள் தடையும் விதித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முந்தைய தினங்களை போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளி செய்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.
அதற்கு, கேள்வி நேரத்துக்கு பிறகு பேச அனுமதிப்பதாகவும், அதற்கான நேரம் வழங்குவதாகவும் சட்டப்பேரவை தலைவர் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முதலில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி கொண்டிருந்தார்.
சட்டப்பேரவையில் தொடர்ந்து அதிமுக அமளியில் ஈடுபட்டு வருவதால் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், அதிமுகவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும், அதிமுகவின் பேச்சுக்கள், அமளி உள்ளிட்டவை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேறினர்.
அதுமட்டுமின்றி, நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தபடி கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுகவினர் நேரில் சந்தித்து இன்று மனு அளிக்கவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.முதல்வர்
ஸ்டாலின் பேச்சு: அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி செய்துவருகிறது. 40 தொகுதிகளிலும் திமுக பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதை திட்டமிட்டு திசை திருப்ப இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கையில்லை எனக் கூறி அதற்கு தடை வாங்கிவிட்டு தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT