Published : 25 Jun 2024 09:48 AM
Last Updated : 25 Jun 2024 09:48 AM

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அறிவிப்பில் கூறப்பட்டதாவது:

அரசு பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறை பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

முதல்கட்டமாக 2024-25-ம் கல்வியாண்டில் 1,000 மாணவர்களுக்கு மேல் படித்து வரும் அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடியில் தரம் உயர்த்தப்படும். இந்த ஆண்டு பாரத சாரண இயக்கத்தின் வைரவிழா ரூ.10 கோடியில் நடத்தப்படும். காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி ரூ.2.32 கோடியில் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கற்று கொடுக்கப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். எந்திரனியல் ஆய்வகம் (ரோபோடிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும். இந்த ஆண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படும்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவினை அரசே ஏற்றுக் கொள்ளும். அதேபோல், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்று சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருச்சி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63 கோடியில் தகைசால் நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும். ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி ரூ.3.15 கோடியில் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்துக்கு புதிய கட்டிடம் ரூ.6 கோடியில் கட்டப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சத்தில் நிறுவப்படும். ரூ.1.14 லட்சத்தில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும் என மொத்தம் 25 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x