Published : 25 Jun 2024 05:10 AM
Last Updated : 25 Jun 2024 05:10 AM

ரூ.4,000 கோடியில் 10,000 கி.மீ. சாலை மேம்பாடு: 2 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறாம். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதில், சாலை வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருகிறது. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.

தமிழகத்தில் சுமார் 1.38 லட்சம் கி.மீ. நீளத்துக்கு கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. ஊரக சாலைகளில் செய்யப்படும் முதலீட்டுக்கும் ஊரக மக்களின் நலனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிக செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

அதன்மூலம், இடுபொருள் செலவை குறைத்து வேளாண் உற்பத்தியை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவை உயர்த்துகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலை பரவலாக்கி, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்கி, வளர்ச்சியை துரிதப்படுத்த உதவுகிறது.

எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளை கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

8,120 கி.மீ.க்கு பணிகள் நிறைவு: அதன்படி, கடந்த 2023 ஜனவரி 13-ம் தேதி சட்டப்பேரவையில் ‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தேன். இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி, தற்போது வரை 8,120 கி.மீ. நீளம் உள்ள ஊரக சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு – ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதமரின் கிராம சாலை திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்களை அமைக்க திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9,324.49 கோடியாகும். இதை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வரும் 2 ஆண்டுகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

ம்எல்ஏக்கள் கோரிக்கை: செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று பேசினர். திட்டத்தை செயல்படுத்தும்போது, எம்எல்ஏக்களின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் கோரும் சாலைகளையும் மேம்படுத்த வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x