Published : 25 Jun 2024 05:02 AM
Last Updated : 25 Jun 2024 05:02 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
திமுக உறுப்பினர் புகழேந்தி மறைவை தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல்
ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
இதில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்
நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்தார். முறையாக மனு தாக்கல் செய்தும், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பான சூழல் ஏற்பட்டது.
மனுக்களை வாபஸ் பெற நாளை (ஜூன் 26) கடைசி நாள். அதற்கான அவகாசம் முடிந்ததும், நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இத்தேர்தலில், ஆளும்கட்சியான திமுக சார்பில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக போட்டியிடாததால், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT