Last Updated : 24 Jun, 2024 08:34 PM

2  

Published : 24 Jun 2024 08:34 PM
Last Updated : 24 Jun 2024 08:34 PM

கள்ளச் சாராய பலி 58 ஆக அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் விடுவிப்பு ஏன்?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 58 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சக்திவேல் என்பவர் ஞாயிற்றுக்கிழமை அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு: கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 223 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் திங்கள்கிழமை இரவு வரை 5 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட உட்பட 58 பேர் உயிரிழந்தனர். 158 பேர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.

உடல்கள் ஒப்படைப்பு: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 145 பேரில் 32 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 48 பேரில் அனுமதிக்கப்பட்டதில் 19 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 3 பேரும், விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 4 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த 56 பேரில், 55 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வீடு திரும்பிய 7 பேர்: புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோன்று கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உள் நோயாளிகள் விபரம்: திங்கள்கிழமை மாலை வரை உள் நோயாளிகளாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 113 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 12 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் என 158 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

கலால் உதவி ஆணையர் விடுவிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையைத் தடுத்தல், அதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போதைப் பொருட்கள் குறித்த தகவல் கிடைத்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை உதவி கலால் ஆணையர் கவனிப்பார். மேலும்ம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதியன்று நடைபெறும் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தின் போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்இடி திரை, துண்டு பிரசுரம், தன்னார்வ அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு நாடகங்கள் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், போதைக்கு ஆளாகி மனம் திருந்தியவருக்கு மறுவாழ்வு ஏற்படுத்துதல், கள்ளச் சாராயம் காய்ச்சி சிறைவாசம் அனுபவித்து திரும்பியவரை கண்காணித்தல் போன்ற பணிகளை உதவி கலால் ஆணையர் மேற்கொள்ள வேண்டும். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக அரசு ஒதுக்கிய ரூ.2 லட்சம் நிதியும், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி நகரின் மைப்பகுதியிலேயே கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்றிருப்பது தெரிந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால், கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x