Published : 24 Jun 2024 08:07 PM
Last Updated : 24 Jun 2024 08:07 PM
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால், தொகுதி வாக்காளர் என்ற முறையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக வழக்கு தொடர்பான ஃஎப்ஐஆர், சாட்சியங்கள் மற்றும் தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் எனக்கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் வழக்கில் சம்பந்தப்பட்டவராகவோ அல்லது பாதிக்கப்பட்டவராகவோ இல்லை எனக்கூறி ஆவணங்களை வழங்க மறுத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “தொகுதி வாக்காளர் என்ற முறையில், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதி மீதான வழக்கின் தீர்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ள மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது. அந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என விசாரணை அமைப்புகள் முடிவெடுத்தால், வாக்காளர் என்ற முறையில் மனுதாரர் தனது தொகுதியின் மக்கள் பிரதிநிதி மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது அந்த வழக்கில் இருந்து மக்கள் பிரதிநிதி தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பான முடிவுக்கு வர அவருக்கு இந்த வழக்கின் ஆவணங்கள் கண்டிப்பாக தேவைப்படும்.
இந்த சூழலில் தீர்ப்பு உள்ளிட்ட வழக்கின் ஆவணங்களை வழங்க முடியாது என மறுக்க முடியாது. எனவே மனுதாரர் இந்த வழக்கின் ஆவணங்களைக் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உரிய கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு அவருக்கு 15 நாட்களில் வழக்கின் தீர்ப்பு நகல் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும்” என தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT