Published : 24 Jun 2024 04:01 PM
Last Updated : 24 Jun 2024 04:01 PM
சென்னை: தங்க முதலீட்டு திட்டத்தில் 13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட 257 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரத்து 910 ரூபாய் மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் 030 மில்லிகிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரத்து 671 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது, என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில், திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கோயில்களில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகளை கட்டிகளாக உருவாக்கி வங்கிகளில் எந்தெந்த கோயிலுடைய தங்கங்கள் அப்படி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து அந்த பணிகளை அறநிலையத்துறை செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பு, “தங்க முதலீட்டு திட்டம் குறித்து கோரினார்கள்.
இந்த திட்டத்தை முதலில் கொண்டு வருகின்றபோது இந்த துறைக்கு ஏற்படுத்தாத அவமானங்களே இல்லை. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தங்க முதலீட்டு திட்டத்தில் 13 திருக்கோயில்களிலிருந்து பெறப்பட்ட 257 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரத்து 910 ரூபாய் மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் 030 மில்லிகிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு ரூ. 5 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரத்து 671 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப்பெறுகிறது.
இந்த வட்டித் தொகை அந்தந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது” என்று பதிலளித்தார்.
மேலும், “சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு ஏறி செல்வதற்கு பக்தர்கள் பயன்பாட்டுக்காக பாலங்கள் கட்டுவதற்கும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கும் டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே பக்தர்கள் நலன் கருதி உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்” என்று எம்எல்ஏ பி.அய்யப்பன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: “சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலானது மலை பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் பக்தர்களின் பயன்பாட்டுக்காக பாலங்கள் கட்டுவதற்கும், தங்கும் விடுதி அமைப்பதற்கும் வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகளை தொடங்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT