Last Updated : 24 Jun, 2024 03:05 PM

 

Published : 24 Jun 2024 03:05 PM
Last Updated : 24 Jun 2024 03:05 PM

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்

மாதிரிப் படம்

சென்னை: ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில், 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை பல ஆண்டுகள் ஓய்வு கால பலன் வழங்காமல் மறுக்கப்பட்டது. பின்னர், வேலை நிறுத்தம் செய்த பிறகு இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டது.

பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 18 மாத கால ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ.15 ஆயிரம் கோடியை நிர்வாகங்கள் செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வு பெறும் ஊழியர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி உயர்வு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 104 மாதங்களாக அவர்களுக்கு அகவிலைப் படி உயர்வு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வரப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடுவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. அத்துடன் விடுப்பு மறுக்கப்படுவதுடன், வேலைப் பளுவாலும் தொழிலாளர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பணி நியமனத்துக்கு தடையாக அதிமுக அரசால் போடப்பட்ட 8 அரசாணைகளை திமுக அரசு தீவிரமாக அமல்படுத்துகிறது. சென்னையில் 6 இடங்களில் மினி பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், போக்குவரத்து துறையை மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமிப்பதையும் அரசு கைவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 6 இடங்கள் உட்பட 100 இடங்களில் நாளை காலை 10 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x