Published : 24 Jun 2024 01:22 PM
Last Updated : 24 Jun 2024 01:22 PM

“முதல்வரின் இரும்புக் கரங்கள் துருபிடித்துவிட்டன” - திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் தாக்கு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

திருச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி அதிமுக மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் புறநகர் தெற்கு ப.குமார், வடக்கு மு.பரஞ்சோதி, மாநகர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பேசியது: மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அந்த இரும்பு கரங்கள் துருப்பிடித்து விட்டது. சவுக்கு சங்கர், பஞ்சுமிட்டாய் விற்பவர், கிளி ஜோசியக்காரர் ஆகியோரை மட்டுமே அடக்குகிறது. கள்ளச் சாராயம் காய்ச்ச தேவையான மெத்தனால் உள்ளிட்ட பொருட்கள் ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இது போன்ற விரும்பத்தகாத மரண சம்பவங்கள் நிகழ்ந்த போது கொதித்தெழுந்த சமூக ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் எங்கே போனார்கள் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இன்று தலையங்கம் எழுதியுள்ளது.

காவல்துறைக்கு முதல்வர் தான் அமைச்சர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் முதல் குற்றவாளி முதல்வர் இரண்டாம் குற்றவாளி அதை தடுக்க தவறிய காவல்துறை மூன்றாம் குற்றவாளி கள்ளச் சாராயத்திற்கு ஆதரவாக இருந்த திமுகவினர். இந்த மூவர் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பேசுகையில், “பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் 57 பேர் இறந்து விட்டதாக கணக்கு காட்டுகிறது. ஆனால் உண்மை கணக்கை முதல்வர் ஸ்டாலின் சொல்ல தயங்குகிறார். ஸ்டாலின் தலைமையிலான அரசை வீழ்த்த அதிமுக தயாராகி வருகிறது என்பதை இந்த கூட்டமே சாட்சி” என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர்கள், “ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், மேடை அமைக்க கூடாது, வாகனத்தில் ஏறி பேசக்கூடாது என்று அடக்குமுறை சர்வாதிகார போக்கை திமுக அரசு கடைபிடிக்கிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x