Published : 24 Jun 2024 01:06 PM
Last Updated : 24 Jun 2024 01:06 PM
ஈரோடு: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை கோருவதற்கு தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளை இழந்த போதிலும், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுகவின் கனவை, தூள், தூளாக்கும் வகையில். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அமையும்.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடப்பதாக சொல்லிக் கொள்ளும் வேளையில், இரண்டாம் முறையாக கள்ளச் சாராயம் குடித்து உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரத்தில் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தபோதே, மீண்டும் இது போன்ற சாவுகள் நிகழாத வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். கள்ளச் சாராயம் விற்பனை குறித்து அரசுக்கு நன்றாக தெரிந்து இருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்திற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது,
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அதிமுகவின் கேள்வியாக உள்ளது. அதிமுக மட்டுமல்லாது, திமுக கூட்டணி கட்சியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றுகேட்கின்றன. அப்படி இருந்தும் சிபிஐ விசாரணைக்கு அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை." என செங்கோட்டையன் கூறினார்.
அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT