Published : 24 Jun 2024 11:37 AM
Last Updated : 24 Jun 2024 11:37 AM

கள்ளக்குறிச்சி அவதூறு | ரூ.1 கோடி நஷ்ட ஈடு; ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏ.,க்கள் நோட்டீஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு எதிராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் இருவரும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளுக்காகப் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீஸில் "ராமதாஸும், அன்புமணியும் இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்;

தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x