Published : 24 Jun 2024 06:35 AM
Last Updated : 24 Jun 2024 06:35 AM

முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்புக்கு கண்டனம்: நிரந்தரமாக ரத்து செய்ய முதல்வர், தலைவர்கள் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

யுஜிசி நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணி களாக அமைந்துள்ளன.

முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வு முறையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதை ஆக்க வேண்டும். தொழில் முறை படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட கைகள் கோப்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தேசிய தேர்வு முகமை தலைவராக உள்ள சுபோத் குமாரை திடீரென்று மத்திய அரசு அரசு நீக்கி, நீட் தேர்வு குழப்பங்கள், குளறுபடிகளை மெய்ப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் 297 நகரங்களில் நடக்க இருந்த தேர்வில் 2.29 லட்சம் மாணவர்கள் பங்கேற்க இருந்த நிலையில், சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் மத்திய அரசின் போக்கு உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி: நீட் தேர்வு நடத்தும் முறை வலி மையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய நீட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நோக்கம் சரியாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை. இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, அந்தந்த மாநிலங்களே தேர்வுகளை நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளஅனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.அகிலன்: இந்தியா முழுவதும் 2.25 லட்சம் பேர் முதுநிலை நீட் தேர்வை எழுத காத்திருந்த நிலையில், தேர்வை தள்ளிவைத்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. குளறுபடிகள் தொடர்ந்து வரும் நிலையில்,தள்ளிவைக்கும் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தேசிய தேர்வு முகமையின் மோசடி முகத்திரை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே முறைகேடு கள் நிறைந்த நீட் தேர்வு முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x