Last Updated : 23 Jun, 2024 04:57 PM

 

Published : 23 Jun 2024 04:57 PM
Last Updated : 23 Jun 2024 04:57 PM

அன்றைய கதையே இன்றைக்கும் தொடர்கிறது..! - கள்ளச் சாராய குற்றமும் பின்னணியும் | HTT Explainer

கடந்தாண்டு மே மாதம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மட்டும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 55-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் , புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு அப்போதும் தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து 21 பேரை அப்போது கைது செய்தனர். அவர்களில் 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீஸார் இதுதொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

அப்போது பேசிய பொன்முடி, “ கடந்த 2016-ல் முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘ஒரே நாளில் மதுவை ஒழிப்பது சாத்தியமில்லை’ என்று பேசியிருக்கிறார்.

கடந்த 04.08.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என அறிவித்திருக்கிறார். 05.12.2018 அன்று, திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் 3 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்த 2 பேரும் கள்ளச் சாராயத்தில் மரணமடைந்துள்ளனர். 14.04.2020 அன்று கடலூர் மாவட்டம் ஆலம்பாக்கத்தில் ஒருவரும் இதே போல் மரணமடைந்துள்ளார்.

தற்போது நடைபெற்ற இச்சம்பவத்தில் (மரக்காணம் சம்பவத்தில்) எந்த நபர்கள் ஈடுபட்டிருந்தாலும், கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார்.

இந்தச் சூழலுக்கு நடுவில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய கோர மரணங்கள் தற்போது நடந்திருக்கின்றன. 180-க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நிலைமை எதுவும் மாறியதாக தெரியவில்லை. இதற்கிடையே கடந்த 3 நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள், கள் விற்றதாக 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால் அது தொடர்பாக அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கும். உதாரணமாக சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார். உடனே பேனர் வைப்பதில் கட்டுப்பாடு விதிக்கபட்டது. பள்ளி பேருந்தில் இருந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்து இறந்தவுடன் பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையில் தீக்குளித்தவுடன் மாநிலம் முழுவதும் கந்துவட்டிக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட லாட்டரியால் வாழ்க்கையை தொலைத்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவுடன் லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அதுபோலவே இதுவும்” என்று சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை குறித்து தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், காவல்துறையினர் ஒருபுறம் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர். மறுபுறம் அவர்கள் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசின் நடவடிக்கையைத் தாண்டி, தவறு என தெரிந்தும் அதை நோக்கிச் செல்லும் மக்கள் இருக்கும் வரை குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.

கள்ளச் சாராயத்தை ஒழிக்க கடந்தாண்டு முதல்வர் அறிவித்த உத்தரவு கள்ளக்குறிச்சியில் என்னவானது?: கடந்தாண்டு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் நடந்த சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பலவித உத்தரவுகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக, கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். ‘10581’ என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம். மாவட்ட மதுவிலக்கு அலுவலகம், டிஎஸ்பிக்கள் அவர்களின் வாட்ஸ் ஆப் எண்களை அறிவிக்க வேண்டும்.

புகார் மீதான நடவடிக்கை குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை குறித்த வார அறிக்கையை, ஒவ்வொரு திங்கள்கிழமையும், உள்துறை செயலர் வழியாக முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆட்சியர் தலைமையில் வாராந்திர கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

முதல்வரின் எந்த உத்தரவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை பின்பற்றவில்லை. எதுவுமே பின்பற்றப்படாததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த முறை பிறப்பித்த உத்தரவை இனியாவது மாவட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்கிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

புகார் தர விரும்பினால்..: விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்களது கிராமங்களில் கள்ளச்சாராயம், விஷச்சாராயம், போதைப்பொருட்கள், அயல் மாநில மதுபானங்கள் விற்பனை செய்தால் விற்பனை செய்பவர்களின் விவரங்களை 90424 69405 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும், தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா எண் 10581 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x