Published : 23 Jun 2024 01:53 PM
Last Updated : 23 Jun 2024 01:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் நால்வர் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. அவர்களின் உறுப்புகள் அதிகளவில் செயல் இழக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து கிசிச்சை தரப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ள்ச் சாராயம் குடித்தவர்களில் தற்போது ஜிப்மர் சிகிச்சையில் திருமாவளவன் (46), ஏசுதாஸ், (35), மகேஷ் (41), பெரியசாமி (40), மாயக்கண்ணன் (72), கண்ணன் (55), வந்தனா- திருநங்கை(27), பாலு (29), மோகன் (50), சிவராமன் (45), ராமநாதன் (62), செல்வம் (45) ஆகிய 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் பரவியது.
இது பற்றி ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது, “சிகிச்சையிலுள்ள 12 பேரில் யாரும் மூளைச்சாவு அடையவில்லை. நால்வர் நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவர்களின் உறுப்புகள் செயல் இழக்க தொடங்கியுள்ளன. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டனர்.
புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரி வழியாக சென்றதாக தகவலொன்று வெளியானதால் புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளன. புதுச்சேரியில் காலாப்பட்டு, கோரிமேடு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தீவிர சோதனையும் நடக்கிறது.
ஆனால் புதுச்சேரிக்கு தமிழகப் பகுதிகளுக்கு வர ஏராளமான கிராமப் பகுதிகளும் உள்ளன. அங்கு எவ்வித சோதனைச் சாவடிகளும் இல்லாத நிலையுள்ளதாகவும் பலர் குறிப்பிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகளுக்கு மொத்தமாக சாராய விற்பனை செய்யவும், சாராயத்தை மொத்தமாக வெளியே எடுத்த செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 56 சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு கிசிச்சையளிக்கின்றனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கள்ளச் சாராய புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சை முடிந்தவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பவும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT