Published : 23 Jun 2024 08:58 AM
Last Updated : 23 Jun 2024 08:58 AM
சென்னை: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்டார். அதில், திருச்செங்கோடு, கொல்லங்கோடு, சோளிங்கர் மற்றும் கம்பம் ஆகிய நகராட்சிகளில் ரூ.45.50 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். திருச்சி மாநகராட்சி மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் பழைய தேக்க திடக் கழிவுகளை பயோமைனிங் முறையில் ரூ.55.70கோடியில் அகற்றி நிலம் மீட்டெடுக்கப்படும்.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 418.57 கி.மீ மண் சாலைகள் ரூ.285.73 கோடியில் தார் சாலை, கான்கிரீட் அல்லது பேவர்பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஆகியவற்றால் சேதமடைந்த சாலைகள் 2,016.41 கி.மீ நீளத்துக்கு ரூ.987.19 கோடியில் சீரமைக்கப்படும்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.115 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடியில் பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தப்படும். 16 புதிய பள்ளிகட்டிடங்கள் ரூ.30 கோடியில் அமைக்கப்படும். நகர்ப்புறங்களை பசுமையாக்கி, இயற்கை சூழலை மேம்படுத்த 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டு திடல்கள் ரூ.10 கோடியில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும்.
பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே 3 இடங்களில் ஈசிஆர் - ஓஎம்ஆர்-ஐ இணைக்கும் வகையில் இரும்பு பாலங்கள் ரூ.21 கோடியில் அமைக்கப் படும். சென்னை மாநகராட்சியில் உள்ள 10 நீர் நிலைகள் ரூ.12.50 கோடியில் புனரமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் 7 புதிய எரிவாயு தகன மேடைகள் ரூ.12 கோடியில் அமைக்கப்படும். 15 பேரூராட்சிகளில் ரூ.125 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 12 பேரூராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். 25 பேரூராட்சிகளில் ரூ.45 கோடியில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
75 பேரூராட்சிகளில் ரூ.10 கோடியில் புதிய சமுதாய கழிப்பிடங்கள் அமைக்கவும், 140 பேரூராட்சிகளில் ரூ.16.18 கோடியில் ஏற்கெனவே உள்ள சமுதாய மற்றும் பொதுக்கழிப்பிடங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த 575 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.315.50 கோடியில் மேம்படுத்தப்படும். காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டுகூட்டு குடிநீர் திட்டம் ரூ.800 கோடியில் செயல்படுத்தப்படும். வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ.80 கோடியில் செயல்படுத்தப்படும்.
எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் மத்திய பிரதான குழாயிலிருந்து மாதவரம் குடிநீர் உந்து நிலையத்துக்கு ரூ.40 கோடியில் புதிய குடிநீர் குழாய்பதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக, ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்றக் கூடம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னதாக பதில் அளித்து பேசும்போது, ‘‘சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. அதனால், சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200-ல்இருந்து 300 ஆக உயரும் வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT