Published : 23 Jun 2024 04:44 AM
Last Updated : 23 Jun 2024 04:44 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய கோர நிகழ்வின் உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இதுவரையில் 11 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று இரவு வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 106 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் பானி பூரி விற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிஜேந்தர் (41) என்பவரின் உடல் நீங்கலாக, மற்ற 56 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் மற்றொரு முக்கிய நபராக கருதப்படும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரை பண்ருட்டி அருகே கைது செய்தனர்.
விழுப்புரம் வழக்கில் கைதானவர்: மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரைச் சேர்ந்த ஜோசப் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் அரியூர் லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த வழக்கில் மதன்குமார் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...