Published : 23 Jun 2024 07:24 AM
Last Updated : 23 Jun 2024 07:24 AM

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மாற்று திறனாளி நல அலுவலர் பணியிடம் காலி

மதுரை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணியிடத்தை, பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.

அதனால், பணியிடம் காலியாக உள்ள மாவட்டங்களிலும், கூடுதல் பொறுப்பை கவனிக்கும் அதிகாரி பணியாற்றும் மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர்கள் கூறியதாவது: மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கரூர் உட்பட 14 மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள மாவட்டங்களை பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்கள்.

காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, 14.2.2022 அன்று கீழ்நிலை அதிகாரிகளை, அவர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலராகப் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, இளநிலை மறுவாழ்வு உதவியாளர், முடநீக்கியல் அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர், பேச்சுத்திறன் பயிற்சியாளர், செயல்திறன் உதவியாளர் போன்ற 6 பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

ஆனால், பதவி உயர்வு பெறபோட்டியால், அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தி, காலி பணியிடங்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலர், இயக்குநருக்குத்தான் உள்ளது. உயரதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால், செயலர், இயக்குநராக இருப்பவர்கள், வழக்குத் தொடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து வைக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதில் தாமதம்ஏற்படுகிறது.

மேலும், அடையாளஅட்டைகளைப் பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. எனவே,காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x