Published : 23 Jun 2024 07:33 AM
Last Updated : 23 Jun 2024 07:33 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்கள் காரணமாக 102 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 1,098 பட்டாசு ஆலைகளும், 3 ஆயிரம் பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெடி மருந்துகளைக் கையாளுதல் தொடர்பாக, பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,435 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளாத 57 பட்டாசு ஆலைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2.85லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு 504 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 102 ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் குறித்து தெரியவந்தாலோ, சட்ட விரோதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலோ பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பட்டாசுஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பட்டாசு தொழில் நலஅமைப்பினர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துக்கு 94439 67578 என்றவாட்ஸ்-அப் எண்ணில் தகவல்தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT