Published : 23 Jun 2024 07:40 AM
Last Updated : 23 Jun 2024 07:40 AM

ரயில் பெட்டிகளில் பாரபட்சம்: வட மாநிலங்களில் நவீனம், தமிழகத்தில் ஓட்டை உடைசல்: உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி

கோப்புப்படம்

மதுரை: வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் நவீனப் பெட்டிகளும், தமிழக ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகளும் பொருத்தப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இவற்றைப் பெற அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இந்த அட்டையை ஆன்லைன் வழியாகப் பரிசோதிக்கும் முறை 2022-ல் சென்னை ரயில் நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறை அமலில்இல்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையை ஆன்லைன் முறையில் பரிசோதிக்கும் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையை ஆன்லைனில் சரிபார்க்கும் நடைமுறையை மதுரை, திருச்சி, சேலம் ரயில் நிலையங்களில் ஏன் அமல்படுத்தவில்லை? பல ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது. ரயில் பெட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை” என்றனர்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “பெரும்பாலான ரயில்களில் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு, புதிய, நவீனப் பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “வட மாநிலங்களில்தான் ரயில்களில் புதிய பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் இயங்கும் ரயில்களில்ஓட்டை உடைசல் பெட்டிகள்தான்உள்ளன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ரயில்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். வழக்கு தொடர்பாக ரயில்வே தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x